வெள்ளி, 17 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -19,20,21






21. முல்லை - தலைவி கூற்று


வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. 
-ஓதலாந்தையார்.
                                        கொன்றைப் பூ


வண்டுபட-வண்டுகள் மொய்க்க,தைந்த-செறிந்து மலர்ந்த ,இடை இடுபு-தழைகளுடன் சேர்த்து கட்டிய,பொன்செய் புனை இழை-பொன்னால் செய்து அணிவது போன்ற தலை அணிகள்,கதுப்பு-கூந்தல்,கொன்றை கானம்-கொன்றை மரக்காடுகள்,தேரன்-நம்ப மாட்டேன்
                                     கொன்றை மரம்


வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்க நிறைய பூங்கொத்துகளை தழைகளுடன் வைத்து கட்டி பொன்னால் செய்தது போன்ற தலை அணிகளை சூடியிருக்கும் மகளிரின் கூந்தல் போன்று தோன்றும் புதியதாக பூத்துள்ள கொன்றை மரக்காடுகள் இது கார்காலம் என்று கூறினாலும் ,நான் நம்ப மாட்டேன்.ஏனென்றால் என் தலைவனாகிய காதலன் ஒருபோதும் பொய் சொல்லமாட்டான் 

இவளோட வீட்டுக்காரன் மழைக்காலத்தில் வந்து விடுகிறேன் ன்னு சொல்லிட்டு போனானே ,இன்னும் வரலேயேன்னு தோழி கவலை படுறா..அதை அறிந்த தலைவி தோழி கவலை படாதே,நான் கொன்றை பூ பூத்ததால் கார் காலம் வந்துட்டு அப்படின்னு கவலை படமாட்டேன்.இன்னும் கார்காலம் வரல.ஏன்னா என் வீட்டுக்காரன் பொய் சொல்ல மாட்டான் 
பாடல் 20. பாலை - தலைவி கூற்று

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே. 
-கோப்பெருஞ்சோழன்

உரவோர்-அறிவுடையோர் ,மடவம்-அறியாமை 

அருளையும்(தொடர்பு இல்லாதவர்களிடம் உண்டாகும் அன்பு)அன்பையும் (உறவினர்களிடம் உண்டாகும் அன்பு) தவிர்த்து தன்னுடைய துணையை விட்டு பொருளுக்காக பிரிவோர் அறிவுடையோர் என்றால் ,அத்தகைய அறிவுடையோர் அறிஞர்களாகவே இருக்கட்டும்.தோழியே!நாம் அறிவிலிகளாகவே இருப்போம் 

"இப்படி நம்மளை விட்டுவிட்டு போய்விட்டாரே" என்று தோழி சொன்னாள்.அதை கேட்ட தலைவி உள்ள வேதனை தாங்காமல் இப்படி சொல்கிறாள்


பாடல் -19
                                                     முல்லை பூ


19. மருதம் - தலைவன் கூற்று

எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. 
-பரணர்.

எவ்வி-எவ்வி எனும் மன்னன(வள்ளல்),பூ இல் வறுந்தலை-பூவை சூடாத தலை,புல்லென்று -பொலிவிழந்து,இனைமதி-வருந்து,மனை மரத்து-வீட்டு தோட்டத்து மரத்து,எல்லுறும்-ஒளிவீசும்,

எவ்வி என்ற மன்னனை இழந்த பாணர்கள் பூவை சூடாமல் வெற்று தலையுடன் இருந்ததை போல வருந்துவாய் மனமே!தோட்டத்து மரத்தில் படர்ந்து பூத்திருக்கும் இரவு நேரத்து முல்லை பூவின் மணத்தை போன்ற கூந்தலை உடைய இவள் யாரோ நமக்கு?



ஒன்னும் இல்லங்க ,வீட்டுல புருசன் பொண்டாட்டி சண்டை.அதான் நம்ம தலைவரு பீல் பண்றாரு .எப்படியாவது சமாதான படுத்தியாவணும்.மனசுக்குள்ளேயே பேசிக்கிற மாதிரி சொல்லுறார்,பாணருகெல்லாம் யாரும் இல்லாத மாதிரி ,இவள விட்டா எனக்கு வேற யாரு இருக்காங்க.அப்படியே சொல்லும் போது லேசா ஐஸ் வேற"சாயங்காலம் பூத்திருக்கிற மல்லிகை பூ போல வாசமுற்ற கூந்தல் உடைய என் பொண்டாட்டி ,நமக்கு என்ன சொந்தமோ?" அப்படின்றாரு.ரொம்ப பீல் பண்றாரோ?

சனி, 11 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -17,18






18. குறிஞ்சி - தோழி கூற்று

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. 
-கபிலர்.
                                                வேர்பலா



வேரல்-மூங்கில்,செவ்வி-தலைவி,காதலி,சிறு கோட்டு-சிறிய காம்பு,



மூங்கிலை வேலியாக உடைய வேர்பலாவினை உடைய சாரல் நாட்டு தலைவனே,இவளை திருமணம் செய்து உனக்கு உடையவளாக ஆக்குக!
யார் அறிவாரோ!இவள் நிலையை,சிறிய காம்பை உடைய பெரிய பலா பழமானது எந்த தாங்குதலும் இல்லாமல் தொங்குவது போல இவளின் உயிரோ மிக சிறியது.இவள் கொண்ட காதலோ மிக பெரியது


                                             சிறுகோட்டு பலா

 

மலைபக்கத்து சிறிய கொம்பிலே தோன்றும் பலா நாளுக்குநாள் பருத்து முதிர்ந்து வரும்.உரிய காலத்தில் பறித்து உண்ணுவோர் இல்லாதபோது கொம்பை ஒடித்து தானும் வீழ்ந்து சிதையும்.அதுபோல,இவளிடம் தோன்றி வளரும் காமம் கனியும் இவளை குறித்த காலத்தில் மனம் கொள்ளாதபோது இவள் காமமும் அதை தாங்கிய அவளது உயிரும் சிதையும் ,எனவே சீக்கிரம் இவளை திருமணம் செய்வாக என்பதாகும் 

உள்ளுறை உவமம் 
தலைவனும் தலைவியும் களவு இன்பம் பயப்பது ,பிறர் வேலிக்குள்ளே உள்ள பலாவை அவர் அறியாமலே உண்டது போன்றது.எனவே அவளை ஊர் அறிய திருமணம் செய்வதால் .அவளோடு இல்லறம் பேணி இன்புறுதல் முற்றத்து பலாவை உண்பது போன்றது ,

நம்ப பிள்ளைங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம காதல் இன்பம் பண்றாங்க.இதை பாத்த தோழி பொண்ணு இப்படி செய்யாதீங்க .சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழுங்க.அப்படின்னு சொல்லுறாங்க 

17. குறிஞ்சி - தலைவன் கூற்று

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே. 
-பேரெயின் முறுவலார்.


                                                குதிரை


மா-குதிரை ,மடல்-பனை மடல்,எருக்கங்கண்ணி-எருக்கம் மாலை,மறுகின்-ஊர் தெருவில்,ஆர்க்க-சிரிக்க பிறிதும் ஆகுதல்-உயிர் விடல்

ஓடும் குதிரை என ஓடாத பனைமடல் குதிரையில் ஏறுவர், சூடக்கூடிய மாலை என மலராத மொட்டு எருக்கமாலையை சூடுவார்,அப்படியே வீதியில் தோன்றி பிறரால் நகைக்கபடுவர்,அப்படியும் வெற்றி ஆகாதபோது சாகவும் துணிவர் ,காதல் நோய் கொண்டவர்கள் 

                                       எருக்கம் பூ

நம்ம பையன் பொண்ணோட தோழிகிட்ட உதவி கேட்டாரு லவ்வர பாக்க,ஆன அவங்க உதவி பண்ண முடியாதுன்னாங்க,என்னால மேல சொன்ன மாதிரி செய்து என் ஆள பாக்க முடியும்,அப்படியே முடியலன்னா சாகவும் முடியும் அப்படின்கிறான் .




திங்கள், 6 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -15,16







16. பாலை - தோழி கூற்று

உள்ளார் கொல்லோ- தோழி! கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார் ,
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.



                                    சுவர் பல்லி

 
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.

உள்ளார் கொல்லோ-நம்மை உடையவன் நினைப்பானோ ,பொன்புனை பகழி-இரும்பால்செய்யப்பட்ட அம்பு ,செப்பம்-சோதனை நோக்கில் ,உகிர் நுதி -விரல் நகம்,புரட்டும்-நெருடி பார்க்கும்,பயிரும்-அழைக்கும் ,கள்ளியங்காடு-கள்ளி செடி நிறைந்த காடு




                                      கள்ளிக்காடு


நம்மை நினைக்காமல் இருப்பாரோ தோழி!ஆறலை கள்வர்கள்(பாலை நிலதிருடர்கள்/வழிப்பறி செய்வோர்)இரும்பால் செய்யப்பட்ட அம்புகளை சோதனை செய்யும் நோக்கில் தன் விரல்களால் நெருடி பார்ப்பார்கள்.அப்போது எழும் ஓசையானது செங்கால்களை உடைய பல்லியானது தன் துணையை அழைக்க எழுப்பும் ஓசை போன்று இருக்கும்.அழகிய கால்களை உடைய கள்ளிக்காட்டை கடந்து நம் தலைவன் செல்லும் போது.

தலைவன் பொருள் தேட வெளியே போய்ட்டாரு,எப்படின்னா இப்ப நம்ம ஊர்ல கல்யாணம் பண்ணிட்டு மனைவிய பிரிஞ்சி வெளிநாடு போறாங்க பாருங்க,அது மாதிரி.பிரிவு தாங்காம தலைவி ரொம்ப வருத்த படுறா.ஆறுதல்காக தோழி இப்படி சொல்லுறா  

15. பாலை - செவிலி கூற்று
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. 
-ஔவையார்
                             பறை                        


.

           
                           
















பறைபட-மேளம் ஒலிக்க,பணிலம் ஆர்ப்ப-சங்கு ஓசை எழ ,இறை கொள்பு-திருமணம் புரிதல் ,பொது இல் -பொது இடம்,ஆய்கழல் -அழகிய கழல்,சேயிலை-செம்மையான இலை(பசுமையான இலை),வெல்வேல்-வெள்ளி வேல்,தொகு வலை-நிறைய வளையல்,மடந்தை-பேதை பெண் 

பறை ஓசை எழ,சங்கு ஒலிக்க திருமணம் நடந்தது,பழைய ஆலமரத்தின் அடியில் உள்ள பொது இடத்தில நாலூர் கோசர்கள் சொல்லிய வாக்கு போல ,அழகிய கழலையும் அணிந்த,செம்மையான ,வெள்ளிவேலை உடைய விடலை பையனோடு சென்ற ,நிறைய வளையலை அணிந்த முன்கையை உடைய நமது பேதைபெண்ணின் நட்பு உண்மையானது.


நாலூர் கோசர் நன்மொழி-வரலாற்று செய்தி 
மோகூர் பழையனுக்கு படைஉதவி வருவதாக தாம் சொன்ன சொல் தவறாமல் கோசர்கள் உதவி செய்தனர் .தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் மோகூர் ,ஆலம்பலம்,கோசர்பாடி ஆகிய இடங்கள் உள்ளன.




நம்ம பொண்ணு பையனோடு யாருக்கும் தெரியாம போய்ட்டா.பொண்ணோட அம்மா ரொம்ப வருதப்படுறா,என்ன ஆச்சோ ஏது ஆச்சுன்னு .செவிலி தாய் சொல்லுறா,"ஒன்னும்,வருத்த படாத,உன் பொண்ணுக்கு அந்த பையனோட ஊர்ல நல்லபடியா கல்யாணம் ஆய்டுச்சு,அவ பண்ணுன காதல் கோசர்கள் செய்த சத்தியம் போல உண்மையானதுதான் "அப்படின்னு      


                                                    ஆலமரம்  

தமிழர் திருமணம் காணொளி 

சனி, 4 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -13,14







14. குறிஞ்சி - தலைவன் கூற்று

அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்
கறிகதில் ,அம்மவிவ் வூரே! மறுகில்
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற,யாம் நாணுகஞ் சிறிதே. 
-தொல்கபிலர்.

வார்ந்திலங்கு -நேராக இருக்கிற ,வையெயிற்று -கூர்மையான பற்கள்,சின்மொழி-சில மொழி(கொஞ்சமான பேச்சு),அரிவை -பெண்(காதலி),மறுகில் -மடல் ஏறுதல்,


                                                



அமிழ்ததின் இனிமை நிரம்பிய அவளின் செந்நாக்கு அவளின் வாயில் கூர்மையாக முளைத்த பற்களை பார்த்து பயப்படும் .அதனால் கொஞ்சமாகவே பேசுபவள்.அவளை அவள் ஊரில் தெருவில் மடல் ஏறி பெறுவேன்.பிறகு இந்த நல்லவளின் கணவன் இவன் என்று சொல்வார்கள்.அப்போது நாங்கள் சிறிது வெட்கமடைவோம்

நம்ம ஆளு லவ்வரோட பிரண்டுகிட்ட சொல்லுறாரு "கொஞ்சம் என் ஆள கூப்பிட்டு வா "கொஞ்சம் பேசணும் ,அப்படின்னாரு.ஆனா இந்த வால் புடிச்சி முடியாதுன்னு சொல்லுது.அதனால கோவப்பட்ட தலைவன் நீ கூப்பிடலன்னா நான் அவளை மடல் ஏறி கல்யாணம் பண்ணிகொள்வேன் .என்ன இவன்தான் இந்த நல்லவளின் கணவன் என்று சொல்ல்வார்கள்.அப்போது நானும் அவளும் கொஞ்சம் வெட்கபப்டுவோம் ,அவ்வளவுதான் !


13. குறிஞ்சி - தலைவி கூற்று

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே- தோழி !
பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. 
-கபிலர்.


மாசற-அழுக்கு இல்லாமல் ,பெயல்-மழை,உழந்த-தாக்கப்பட்ட,
           இரும்பிணர் துறுகல்-சொரசொரப்பானஉருண்டையான
           கல் , 





சுத்தமாக குளிப்பாட்டப்பட்ட யானை போன்று மழையால் குளிப்பாட்டப்பட உருண்டையான சொரசொரப்பான கல் இருந்தது.அந்த கல்லின் குளிர்ச்சியான ஒரு புறத்தே நானும் அவனும் கூடி இருந்தோம்.அவன் என்னை பிரிந்ததால் எனக்கு இந்த நோயை தந்தான்.அதனால் குவளை போன்ற என் கண்கள் பசலை நோயை பெற்றது 





நம்ம பையனும் பொண்ணும் லவ் பண்ணுனாங்க,எங்கன்னா அந்த பெரிய கல்லுக்கு பின்னாடி.ரொம்ப ஜாலிய இருந்தாங்க ,பையன் பிரிஞ்சிட்டாரு.அந்த பிரிவ தாங்காத பொண்ணுதான் இப்படி தன்னோட பிரண்ட்டுகிட்ட சொல்லிட்டு இருக்கா 




சனி, 28 மே, 2011

குறுந்தொகை பாடல் 11,12









12. பாலை - தலைவி கூற்று

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. 
-ஓதலாந்தையார்.

எயினர் -வேடர்,பகழி-அம்பு,மாய்க்கும்-கூர் தீட்டும் ,நொதுமல் கழலும்-இளக்காரமான சொற்களை கூறும்,குறும்பல் சுனை-குறுகிய சுனை (மலையில் வடியும் சிறிய நீர் ஓடை),எறும்பி-எறும்பு,உலைக்கல்-வெப்பமான கல்,


                                                       எறும்பு புற்று 


                                                

                                               வில்லுடன் வேடர் 



b2e0af8de0aeb2e0af88_kancanakullai.jpg" width="300" />


என் காதலன் சென்ற வழியானது எறும்பின் புற்றுபோன்ற சிறிய சுனைகளையும் ,உலைக்கல் போன்ற வெப்பமுடையபாறைகளை ஏறியும்,கூர்மையான வில்லை உடைய வேடர்கள் தன்அம்புகளை கூர் தீட்டுவதுமான கொடுமையான வழியாகும்.அதை நினைத்து கவலை கொள்ளாமல் என்னை இகழ்கிறது இந்த ஊர்.



ரொம்ப வ ருத்தமா இருக்காங்க தலைவி,அதை பாத்த பிரண்டு கவலைபடாதேன்னு ஆறுதல் சொல்லுறாங்க.அதுக்கு தலைவி சொல்லுறாங்க என் வீட்டுகாரர் பிரிந்ததபத்தி கவலை படல ,அவர் போன வழிதான் கஷ்டமானது அப்படின்னு சொல்லுறாங்க 


                                                  நீர் சுனை 






11. பாலை - தலைவி கூற்று

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. 
-மாமூலனார்

கோடு-சங்கு,ஈர் இலங்கு-அறுத்து செய்யப்பட்ட,வளை நெகிழ -வளையல் கையில் இருந்து நழுவுதல்,கலி இழும் -கலங்கி அழுவுதல்,ஈங்கு-இங்கு,உறைதல்-இந்த இடத்தில் இருத்தல்,உய்குவம்-தப்பிப்போம்,எழுவினி =எழு+இனி ,முன்று-முற்படு,குல்லை-கஞ்சகுல்லை எனும் செடி,வடுகர்-வேங்கடத்தின் வடக்கில் வாழும் வேடர்கள்,கட்டி-கங்க நாடு,மொழி பெயர்-வேற்று மொழி,வழிபடல் சூழ்ந்து-அவர் இருக்கும் இடம் செல்ல நினைத்தல்


                                           கஞ்சன்கொல்லை பூ 


சங்கு அறுத்து செய்யப்பட்ட வளையல் கையில் இருந்து நழுவுகிறது.நாள்தோறும் கண்மூடாமல் கலங்கி அழும் கண்ணோடு இப்படி இங்கே இருப்பதில் இருந்து தப்பிப்போம்.எழுவாய்!என் நெஞ்சே!கஞ்ச குல்லையை தலைமாலையை உடைய வடுகருடைய இடமான,பல வேலைகள் உடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்புறத்தில் உள்ள ,மொழி வேறாக இருந்தாலும் அவனை நாடி செல்வோம்.
என் காதலன் இல்லாத இந்த இடத்தில் இருந்து அழுவதை விட ,வேற மொழி பேசுற இடத்தில் இருக்கிற அவனை அடையலாம் என்று தன் தோழியிடம் கூறுகிறாள் தலைவி 

சனி, 21 மே, 2011

குறுந்தொகை பாடல் -9,10








9. நெய்தல் - தோழி கூற்று 

யாயா கியளே மாஅ யோளோ
மடை மான் செப்பில் தமிய
பொய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால்; நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொரும்
கயமூழ்ழு மகளிர் கண்ணின் மானும
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முள் நாணிக் கரப்பாடு உம்மே 

யாய்-தாய்,மாயோள்-மாமை நிறம் கொண்டவள்,மடைமான் செப்பு-நீர் நிறைந்த அழகிய குவளை,தமிய-தனியே,வைகிய-வைக்கப்பட்டுள்ள,பொய்யா பூ-சூடாத பூ, பாசடை-பசுமையான இலைகள்,கணைக்கால்-தடித்த காம்பு,நெய்தல்-நெய்தல் பூ ,இனமீன்-கூட்டமான மீன்கள்,இரும்கழி-நெய்தல் நில உப்பங்கழி,கயம்-ஆழமான குளம்,மானும்-ஒத்து இருக்கிற,கரப்பாடு-மறைத்து பேசுதல் 

தாய் போன்றவள்,மாமை நிறம் கொண்டவள்,நீர் நிறைந்த அழகான செப்பு குவளையில் தனியே வைக்கப்பட்ட சூடாத பூவை போன்று உடல் மெலிந்தவள்.பசுமையான இலைகளுடன்,தடித்த காம்புகளை உடைய நெய்தல் பூவானது ,மீன்கள் கூட்டமாக உப்பங்கழியில் வருவதற்கு காரணமான,வெள்ளம வரும்போது,நீரில் மூழ்கும்.அந்த காட்சியானது ஆழமான குளத்தில் மூழ்கிக்குளிக்கும் பெண்களை போன்று இருக்கும்,அத்தகைய நீர்துறையை உடைய தலைவன் தன்னை பேணாது பரத்தையை பேணும் கொடுமையை நம்மிடம் மறைத்து பேசுகிற தலைவியாகிய இவள் கற்பு பூண்டவள்.

நம்ம ஆளு சின்னவீடு செட்டப் பண்ணிட்டாரு.ஊரெல்லாம் தெரிஞ்சிபோச்சு.வீட்டுக்கார அம்மா ரொம்ப வருத்த படுறாங்க,இருந்தாலும் யாருட்டையும் சொல்லறது இல்ல.அத பாத்த அவங்க பிரண்ட் மேல உள்ள மாதிரி வருத்தப்பட்டு சொல்லுறாங்க 


                       குவளையில் பூ
                                                 
                                     பசுமை இலைகளிடையே பூ 


                                                             உப்பங்கழி


                                     குளத்தில் குளிக்கும் பெண் 






10. பாலை - தோழி கூற்று

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே. 
-ஓரம்போகியார்.

யாய் ஆகியோள்-தலைவியானவள் ,விழவு-செல்வம்,பயறுபோலிணர-பயரிற்றம் செடி போன்ற,மென்சினை-மெல்லிய கிளை,



தலைவியானவள்,தலைவன் செல்வம் பெற்று விளங்குவதற்கு காரணமானவள்.பயிற்றம் கொற்று போன்ற பூங்கொத்தில் உள்ள மகரந்தம் தன்மேல் படும் படி உழவர்கள் வலைக்கின்றபடி மெல்லிய கிளைகளை உடைய காஞ்சி மரங்களை உடைய நாட்டின் தலைவனின் கொடுமையை மறைத்து,மறந்து அவனை எதிர்கொள்கிறாள் 

                 உள்ளுறை உவமம்

காஞ்சிமரமானது நிறைய பூக்களை பூத்து குலுங்கும்.நிலத்தை உழும் உழவர்கள் ,இந்த பூக்கள் நிலத்துக்கு உரமாவதால் .அதை பறித்து வயலில் உதிர்ப்பர்.அப்படி செய்யும் போது பூக்களின் மகரந்தம் உழவர்களின் மீது பட்டு மஞ்சள் நிறமாக இருப்பர்.அப்படி பட்ட ஊரை சேர்ந்த தலைவன் பரத்தை சேரியை நாடி செல்லும் கொடுமையை  மறைத்து அவன் வெட்கப்படும்படி அவனை எதிர் கொண்டு வரவேற்கிறாள் .


இப்பாடலில் உழவன் தலைவனாகவும் உழும் நிலம் பரத்தை சேரியாகவும் உழவர் பூக்களை உதிர்ப்பது தலைவன் பரத்தையரை தழுவுதலும் உழவரின் மேல் உள்ள மகரந்தம் தலைவன் பரத்தையை  தழுவியதற்கான அடையாளமாகவும் உள்ளுறை உவமம் அமையப்பட்டுள்ளது 

செவ்வாய், 17 மே, 2011

குறுந்தொகை பாடல்-8






8. மருதம் - காதற் பரத்தை கூற்று

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 
-ஆலங்குடி வங்கனார்.

கழனி-சேறும் சகதியுமான வயல்,மாஅத்து-மாமரத்து,உகு-உதிரும்,தூஉம்-கவ்வும்,எம்இல்-எனது வீடு,தம்இல்-அவன் வீடு,பெருமொழி-புகழ்மொழி,பாவை-பொம்மை,மேவன-விரும்பிய,தன் புதல்வன் தாய்-தனது மனைவி 


வயல் அருகில் உள்ள மாமரத்திலிருந்து கனிந்து வீழ்கிற மாம்பழத்தை பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும்.அப்படிப்பட்ட ஊரை உடைய தலைவன்,என்னை வயப்படுத்துவதற்காக என்னை பற்றி புகழ்வான்.தன்னுடைய வீட்டில் மட்டும் கண்ணாடி முன்பு நின்று கையும் காலையும் தூக்கினால் கண்ணாடியில் உள்ள பிம்ப பாவையும் தூக்கும்,அதுபோல அவன் மனைவி சொல்வதற்கெல்லாம் விரும்பி செய்வான் 

நம்ம தலைவரு கீப்,அதாங்க சின்ன வீடு வச்சி இருக்காரு.வீட்டுகார அம்மாவுக்கு தெரிஞ்சிபோச்சு,என்ன பண்ணுவாங்க,எப்பயுமே தப்பு பண்ணுனவங்கள விட்டுருவாங்க,அப்படிதான் இந்த அம்மாவும் என் வீட்டுக்காரு நல்லவருதான்.,அவதான் இவர மயக்கிட்டா அப்படின்னாங்க ,இது சின்னவீட்டுக்கு காதுல விழுந்ததுதான்,வந்தது பாருங்க கோவம்".உன் வீட்டுக்காரன் மாம்பழம் வயல்ல வந்து விழுந்த மாதிரி என்னட்ட வந்ததும் இல்லாம யோக்கியன் மாதிரி நீ சொல்றதுக்குகெல்லாம் பொம்மை மாதிரி தலையாட்டுறான்",அப்படின்னு திட்டுறா 


                                                          மாம்பழம்  
                                                         
                                                             வாளை மீன் 
                                                கண்ணாடியில் பிம்பம் 


புதன், 4 மே, 2011

குறுந்தொகை பாடல்-6,7










6. நெய்தல் - தலைவி கூற்று

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 
-பதுமனார்.

நள்ளென்றே -நன்றாக இருட்டிய 
அவிந்து-முடிந்து 
நனந்தலை -அகன்ற 
மன்ற-உண்மையாக 
முனிவு-வெறுப்பு 

இரவும் நன்றாக இருட்டி உள்ளது .பேச்சு அரவம் இன்றி மக்களும் நன்றாக தூங்குகின்றனர் .வெறுப்பு இல்லாத இந்த உலகமும் நன்றாக தூங்குகிறது .நான் மட்டும் இப்படி தூக்கம் வராமல் வருந்துகிறேன்

நம்ம தலைவி காதலின் பிரிவால் தூக்கம் வராம கஷ்டபடுறாங்க .அதான் இப்படி புலம்பல் 


குறுந்தொகை பாடல் -7
7. பாலை - கண்டோர் கூற்று

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. 
-பெரும்பதுமனார்.

வில்லோன்-வில்லை உடையவன் ,காலன கழலே -காலில் கழல் அணிந்துள்ளான்,தொடியோள்-தொடியை அணிந்துள்ளாள்,யார்கொள்-அவர்களுடைய உறவு என்னவோ ,ஆரியர்-கழை கூத்தர் ,கால் பொரக் கலங்கி -மேற்காற்றால் கலங்கி ,வேய்பயில் -மூங்கில் நிறைந்த ,அழுவம்-பாலை நிலம் 

தோளில் வில்லை மாட்டி இருக்கிறான்.காலில் கழல் அணிந்து உள்ளான்.மெல்லிய தோளில் தொடியும் காலில் சிலம்பும் அணிந்து உள்ளாள்,இந்த நல்லவர்கள் யாரோ?அவர்களுள் என்ன உறவோ?கழை கூத்தாடிகள் கயிற்றில் ஆடி வித்தை காடும் போது,அவர்கள் ஒலிக்கும் பறை ஒலியை போன்று ,மேற்காற்றால் வாகை மரத்தின் வெண்ணிற நெற்றுகள் ஒலி எழுப்புகின்ற ,மூங்கில் நிறைந்த,இந்த பாலை நிலத்தில் செல்கின்றனரே,

ஒன்னும் இல்லங்க,நம்ம புள்ளைங்க ரெண்டும் வீட்ட விட்டு எஸ்கேப்பு ,நல்ல கோடை காலம் வேற,பாக்கிறவங்க ஐயோ!யாரு பெத்த புள்ளைங்களோ இப்படி வெயில்ல போகுதுங்களேனு வருத்த பட்டு சொல்லுறாங்க
                                                    சிலம்பு  
              கயிற்றில் நடக்கும் கழை கூத்தாடு சிறுமி 

                                                                  வாகை பூ 
                                                     வாகை நெற்று
                                                                   மூங்கில் 


ஞாயிறு, 1 மே, 2011

குறுந்தொகை பாடல்-5

                                                                நாரை

5. நெய்தல் - தலைவி கூற்று

அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. 
-நரிவெரூ உத்தலையார்.

வதி குருகு-மருத நிலத்திலிருந்து நெய்தல் நிலத்தில் தன் துணையை பிரிந்து தங்கும் நாரை,தீநீர்-இனிய நீர்,மெல்லம் புலம்பன் -மெல்லிய கடற்கரையை உடைய தலைவன் ,உண்கண் -தாமரை,உண்ணுகிற கண் ,பாட ஒல்ல -மூட முடியாத 


தோழியே! இதுதான் காதல் என்பதோ!தன துணையை விட்டு பிரிந்து தங்குவதற்கு ஏற்ற இனிய நிழலை உடைய புன்னை மரம் உள்ளது .ஆனால் அதன் அருகிலேயே கரையை உடைக்கிற அலையை உடைய நீர்த்திவலையால்,உண்ணுகிற தன்மை உடைய பல இதழ்களை உடைய தாமரை பூ பூத்து இருக்கிறது,அது போன்ற என் கண்கள் ,மெல்லிய கடற்கரையை உடைய என் தலைவன் பிரிந்ததால் ,என் கண்கள் மூட மறுக்கிறதே


                                      புன்னை பூ,காய்  


                                                   
                                                               தாமரை பூ 







4. நெய்தல் - தலைமகள் கூற்று

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. 
-காமஞ்சேர் குளத்தார்

நோம் என் நெஞ்சே -வருந்தாதே மனமே ,கண்ணீர் தாங்கி -கண்ணீரை துடைக்க ,அமைவிலர்-அருகில் இல்லாதவர் 




வருந்தாதே மனமே ,என்னவர் அருகில் இல்லாத துன்பத்தால் ,என் கண்ணையே தீய்துவிடும் வெப்பமுள்ள கண்ணீரானதுவழிகிறது .அந்த கண்ணீரை துடைப்பதற்கு உரிய என் காதலன் என் அருகில் இல்லையே ,வருந்தாதே மனமே 

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 3



குறுஞ்சி பூ 



3. குறிஞ்சி - தலைவி கூற்று

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 
-தேவகுலத்தா

தேவகுலம்-கோவில்,நீர்-கடல்,கருங்கோல்-கருமை நிறம் உடைய குறிஞ்சி பூவினுடைய காம்பு ,நாடன்-குறிஞ்சி நாட்டின் தலைவன் 
ஆரள்-ஆழம்

நம்ம பொண்ணு திருட்டுதனமா காதல் பண்றாங்க .அதை பார்த்த தோழி இப்படி திருட்டுதனமா பண்ணாத,அவன் லவ் பண்றன்னு ஏமாத்திட்டு போய்டுவான் அப்படின்னு திட்டுறாங்க.நம்ம பசங்களுக்கு அப்ப என்ன சொன்னாலும் ஏறாது .என்ன சொல்லுது பாருங்க 

எங்க காதல் நிலத்தை விட பெரிது,வானத்தை விட உயர்ந்தது ,கடலை விட ஆழமானது .கறுப்புநிற கொம்புல பூத்திருக்கின்ற குறிஞ்சி பூவில் உள்ள தேனை மட்டுமே சேகரிக்கும் என் தலைவன் நாட்டு தேன் ஈக்கள்
அதனால என் ஆளும் என்ன மட்டும் தான் காதல் பண்ணுவான்.நீ ஒன்னும் எனக்கு  அறிவுரை சொல்ல வேண்டாம் 

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 2




2. குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 
-இறையனார்.

கொங்கு -தேன்
தேர் ------தேடுதல் 
அஞ்சிறைத்தும்பி-உடலோடு சிறகை உடைய வண்டு 
காமம் செப்பாது -முக நட்பபிற்காக சொல்லாது 
மொழி-சொல்லு 
பயிலியது -பயின்றது 
கெழிய-உரிமை உடைய 
மயிலியல் -மயில் போன்ற 
செரியெயிற்று --வரிசையான பற்களை உடைய 
அரிவை-பெண் 
நறிய-மிகுந்த மணம் உடைய  

இந்த பாட்டு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதா.நம்ம சிவாஜி பாட்டு எழுதி கொடுப்பாரு பாருங்க நம்ம நாகேஷ்க்கு திருவிளையாடல் படத்துல.அந்த பாட்டு தாங்க .

அதாவது காதல் பண்றவங்களுக்கு தன்னோட காதலி மட்டுமே உயர்ந்தவளாக தெரியும்.அப்படித்தான் அவரோட காதலியோட கூந்தல் மணத்தை விட எந்த பூவிலாவது அதிக மணம் உள்ளதா என கேட்கிறார் 


தேனை தேடி வாழ்கைநடத்துகிற வண்டே!எனது முகத்தை பார்தத்ற்காக சொல்லாதே .கண்டதை மட்டும் சொல்லு .என்னோடு பயிலகூடிய நட்பையும் உரிமையும் ,வரிசையான பற்களையும் உடைய இந்த பெண்ணின் கூந்தலின் மணத்தை விட அதிகம் உள்ள பூக்களை எங்கேயும் பார்த்ததுண்டோ ?

வியாழன், 21 ஏப்ரல், 2011

குறுந்தொகை பாடல் 1

குறுந்தொகை பாடல் 1

திணை -குறிஞ்சி ,இடம்-மழையும் மலை சார்ந்த இடமும் ,காலம்-கூதிர் ,பொழுது-யாமம் ,கடவுள்-முருகன்-தினை,நெல் விலங்கு-யானை,புலி,பன்றி,கரடி,  பறவை-மெயில்,கிளி, மரம-வேங்கை,கோங்கு பறை-வெறியாட்டு பறை ,தொண்டக பறை , தொழில்-தேன் எடுத்தல் ,பண்-குறிஞ்சி பண்,பூ-காந்தள்,வேங்கை,குறிஞ்சி ,நீர்-சுனை நீர்,அருவி நீர் ,உரிபொருள்-புணர்தலும் புணர்தல் நிமித்தமும் 

காந்தள்,கர்ர்திகை,கண்வள்ளி பூ 




1. குறிஞ்சி - தோழி கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 
-திப்புத் தோளார்.

செங்களம்-போரினால் போர்க்களம் இரத்ததால் சிவப்புபாக உள்ளது ,தோய்ந்த-கறைபட்ட .கோட்டி-தந்தம்,கொம்பு ,கழல் -தண்டை ,கால் வளையம் ,


இரத்த போர் களத்தையும்,இரத்த கறைபட்ட அம்பினையும் ,பகைவர்களை  குத்தி கொன்றதால் இரத்த கறைபட்ட  தந்தங்களை கொண்ட யானைகளையும் ,காலில் வீர கழல்கலையும் அணிந்த முருகனது குன்றம் .மேலும் இரத்தம் போன்ற நிறைந்த காந்தள் பூ குலைகளை கொண்டது


நம்ம பசங்க இப்ப ரோஜாபூ கொடுத்து ஐ லவ் யூ சொல்லற மாதிரி அந்த காலத்துல நம்ம ஆளு கார்த்திகை பூ ஒன்னு மட்டும்  கொடுத்து இருக்காரு,அதுவும் நேரா கொடுக்காம ஆளோட பிரண்ட்கிட்ட குடுத்து கொடுக்க சொல்றாரு .ஆனா அந்த வால்புடிச்சி சொல்லுது(மேலே உள்ள உரையை சேர்த்து கொள்ளவும்). எங்க ஊரே சிவப்பு கலர்தான் .இந்த ஒரு பூ எதுக்கு

புதன், 20 ஏப்ரல், 2011

குறுந்தொகை 
குறுந்தொகை எட்டு தொகை நூல்களில் ஒன்று .கவிதை தோன்றிய காலத்தில் புலவர்கள் சிறுசிறு வரிகளால் எழுதினர் .அப்படி பாடப்பட்ட பாடல்கள் இரண்டாயிரத்து நானூற்று இருபத்து ஆறு (2426).அவைதான் எட்டு தொகை நூல்கள்.அவை பொருளையும் பா வகையும் அடி அளவையும் கொண்டு நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு,அகநானூறு,புறநானூறு ,பதிற்றுப்பத்து.பரிபாடல் ,கலித்தொகை ஆகும்

நான்கடி முதல் எட்டு அடிவரை உடையது, குறுந்தொகை 205 புலவர்களால் பாடப்பட்டது .தொகுத்தவர் உப்ப்பூரி குடி கிழார் ,மொத்தம் 401 பாடல்கள் குறுந்தொகையில் உள்ளது.

குறுந்தொகையில் உள்ள பாடல்கள் அனைத்திற்கும் இந்த வலை பூவில் விளக்கத்துடன எழுதலாம் என்று  தமிழ் காதலுடன் உள்ளேன்.தவறுகள் இருந்தால் தமிழ் பெரியோர்கள் மன்னித்து தவறுகளை சுட்டி காட்டவும்  

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

தமிழ் வாழ்க

முதன் முதலாக எ னக்கு தெரிந்த தமிழை இந்த  வலை பூவில் பகிர்ந்து
கொள்கிறேன்


காதலால்தான்  உலகில்  எல்லாம் நடக்கிறது .அப்படி பட்ட ஒரு காதல்  வயப்பட்ட ஆண் தன் காதலை எப்படி கூறுகிறான் என்பதை சங்க கால பாடல் ஒன்றை பாருங்கள் .



சுனைப்பூ குற்று தொடலை தை இப்
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்த்ளனோ? இலளோ?பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பி ன்னும் த ன்னுழை யதுவே
                                                        -  
குற்று-பறித்து ,தொடலை -மாலை  தைஇ- செய்து,பா னாள்-நள்ளிரவு ,பள்ளி - ப டு க்கை ,உழை -இடம்

சுனையில் பூத்த பூக்களை பறித்து மாலையாக கழுத்தில் சூடி கொண்டு திணை புனத்தில் கிளி விரட்டும் பூ போன்ற கண்களை உடைய பேதை பெண் அவள் அறிந்தா ளோ?இல்லையோ? அவள் மீது நான் கொண்ட காதலால் நள்ளிரவில் கூட நான் தூங்குவதில்லை .தூங்கும் யானையின் பெரு மூச்சுபோல் மூச்சு விடுகிறேன்,என் உள்ளம அவளிடமே  உள்ளது