வெள்ளி, 17 ஜூன், 2011

குறுந்தொகை பாடல் -19,20,21






21. முல்லை - தலைவி கூற்று


வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. 
-ஓதலாந்தையார்.
                                        கொன்றைப் பூ


வண்டுபட-வண்டுகள் மொய்க்க,தைந்த-செறிந்து மலர்ந்த ,இடை இடுபு-தழைகளுடன் சேர்த்து கட்டிய,பொன்செய் புனை இழை-பொன்னால் செய்து அணிவது போன்ற தலை அணிகள்,கதுப்பு-கூந்தல்,கொன்றை கானம்-கொன்றை மரக்காடுகள்,தேரன்-நம்ப மாட்டேன்
                                     கொன்றை மரம்


வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்க நிறைய பூங்கொத்துகளை தழைகளுடன் வைத்து கட்டி பொன்னால் செய்தது போன்ற தலை அணிகளை சூடியிருக்கும் மகளிரின் கூந்தல் போன்று தோன்றும் புதியதாக பூத்துள்ள கொன்றை மரக்காடுகள் இது கார்காலம் என்று கூறினாலும் ,நான் நம்ப மாட்டேன்.ஏனென்றால் என் தலைவனாகிய காதலன் ஒருபோதும் பொய் சொல்லமாட்டான் 

இவளோட வீட்டுக்காரன் மழைக்காலத்தில் வந்து விடுகிறேன் ன்னு சொல்லிட்டு போனானே ,இன்னும் வரலேயேன்னு தோழி கவலை படுறா..அதை அறிந்த தலைவி தோழி கவலை படாதே,நான் கொன்றை பூ பூத்ததால் கார் காலம் வந்துட்டு அப்படின்னு கவலை படமாட்டேன்.இன்னும் கார்காலம் வரல.ஏன்னா என் வீட்டுக்காரன் பொய் சொல்ல மாட்டான் 
பாடல் 20. பாலை - தலைவி கூற்று

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே. 
-கோப்பெருஞ்சோழன்

உரவோர்-அறிவுடையோர் ,மடவம்-அறியாமை 

அருளையும்(தொடர்பு இல்லாதவர்களிடம் உண்டாகும் அன்பு)அன்பையும் (உறவினர்களிடம் உண்டாகும் அன்பு) தவிர்த்து தன்னுடைய துணையை விட்டு பொருளுக்காக பிரிவோர் அறிவுடையோர் என்றால் ,அத்தகைய அறிவுடையோர் அறிஞர்களாகவே இருக்கட்டும்.தோழியே!நாம் அறிவிலிகளாகவே இருப்போம் 

"இப்படி நம்மளை விட்டுவிட்டு போய்விட்டாரே" என்று தோழி சொன்னாள்.அதை கேட்ட தலைவி உள்ள வேதனை தாங்காமல் இப்படி சொல்கிறாள்


பாடல் -19
                                                     முல்லை பூ


19. மருதம் - தலைவன் கூற்று

எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. 
-பரணர்.

எவ்வி-எவ்வி எனும் மன்னன(வள்ளல்),பூ இல் வறுந்தலை-பூவை சூடாத தலை,புல்லென்று -பொலிவிழந்து,இனைமதி-வருந்து,மனை மரத்து-வீட்டு தோட்டத்து மரத்து,எல்லுறும்-ஒளிவீசும்,

எவ்வி என்ற மன்னனை இழந்த பாணர்கள் பூவை சூடாமல் வெற்று தலையுடன் இருந்ததை போல வருந்துவாய் மனமே!தோட்டத்து மரத்தில் படர்ந்து பூத்திருக்கும் இரவு நேரத்து முல்லை பூவின் மணத்தை போன்ற கூந்தலை உடைய இவள் யாரோ நமக்கு?



ஒன்னும் இல்லங்க ,வீட்டுல புருசன் பொண்டாட்டி சண்டை.அதான் நம்ம தலைவரு பீல் பண்றாரு .எப்படியாவது சமாதான படுத்தியாவணும்.மனசுக்குள்ளேயே பேசிக்கிற மாதிரி சொல்லுறார்,பாணருகெல்லாம் யாரும் இல்லாத மாதிரி ,இவள விட்டா எனக்கு வேற யாரு இருக்காங்க.அப்படியே சொல்லும் போது லேசா ஐஸ் வேற"சாயங்காலம் பூத்திருக்கிற மல்லிகை பூ போல வாசமுற்ற கூந்தல் உடைய என் பொண்டாட்டி ,நமக்கு என்ன சொந்தமோ?" அப்படின்றாரு.ரொம்ப பீல் பண்றாரோ?

கருத்துகள் இல்லை: