தொல்காப்பியம்-எழுதத்திகாரம்

தொல்காப்பியம் தமிழ் இலக்கண நூலாகும் .வலை தளங்களில் நூற்பாக்கள் மட்டுமே காணப்படுகிறது .எனவே விளக்கங்களுடன் எழுத முற்படுகிறேன் .மாணவர்கள் பயன்படுத்திகொள்ளவும்.தவறுகளை தமிழ் அறிந்த பெரியோர் தயவு செய்து கருத்துரைக்கவும் .

சிறப்புப்பாயிரம் 

வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
10 
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே.


விளக்கம் :
15
வடக்கில் வேங்கடத்தையும் தெற்கில் குமரியை யும் எல்லையாக உடைய தமிழ் வழங்கும் இந்த நல்ல நாட்டில் வழக்கு மொழியும் செய்யுள்  மொழியாகவும் தமிழ் உள்ளது.அதில் எழுத்து,செய்யுள்,பொருளை முந்தைய நூற்களை மேற்கோள் ஆக  கொண்டு தொகுத்தார்,குற்றம் இல்லாத நூல்,பாண்டியன் அவையில் நான்கு வேதங்களையும்  கற்று தெளிந்த அதங்கோட்டாசான் அவர்களின் கேள்விகளுக்கு மயக்கம் இல்லாமல் எ டுத்து காட்டி ஐந்திரம் என்ற நூலை நன்கு கற்றறிந்த தொல்காப்பியர் என தன் பெயர் உடையவர் இயற்றினார்.

எழுத்ததிகாரம் -நூல் மரபு 
எழுத்து 
  1.எழுத்து எனப்படுப 
      அகரம் முதல் னகரம் இறுவாய் 
      முப்ப ஃது என்ப 
     சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே  
சார்பு எ ழுத்துகளை சேர்க்காமல் அகரம் முதல் ஔ வரையான உயிர் எழுத்துகளும் க் முதல் ன் வரையான மெய் எழுத்துகளும் சேர்ந்த முப்பது எழுத்துகளும் தமிழின் எழுத்து எனப்படும்,

இறுவாய்-இறுதி ,அலங்கடை-தவிர்த்து 

2.அவைதாம் 
  குற்றியல் இகரம் குற்றியல் உகரம் 
  ஆய்தம் என்ற 
  முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன 
சார்பு எழுத்து எனப்படுவது குற்றியல் இகரம்,குற்றியல் உகரம் ,ஆய்தம் ஆகிய மூன்றும் ஆகும்.

எனப்படுவதியாது -குற்றியல் இகரம் 
சுக்கு,காசு -குற்றியல் உகரம் 
ஃ-ஆய்தம் 

குறில் -குற்றெழுத்துக்கள்
3.அவற்றுள் 
  அ இ உ 
 எ ஒ என்னும் 
அப்பால் ஐந்தும் 
 ஓரளபு  இசைக்கும் குற்றெழுத்து என்ப 

மொழி முதல் எழுத்தின் உயிர் எழுத்துகளில் அ இ உ எ ஒ என்ற ஐந்து எழுத் துகளும்  ஒரு மாத்திரை ஒலிக்கும்  குற்று எழுத்துகள் ஆகும் .

அளபு-கால அளவு 
நெடில் -நெட்டெழுத்துகள்
4.ஆ ஈ ஊ ஏ 
  ஐ ஓ ஔ என்னும் 
  அப்பால் ஏழும்
  ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப 
மொழி முதல் எழுத்தின் உயிர் எழுத்துகளில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற ஏழு எழுத்துகளும் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் நெட்டெழுத்துகள் ஆகும் .

5.மூவளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே 
  ஓர் எழுத்து மூன்று மாத்திரை அளவு ஒலிக்காது

6.நீட்டம் வேண்டின் அவ்வளபு உடைய 
  கூட்டி எழுதுதல் என்மனார் புலவர்
இனிய ஓசைக்காக எழுத்துகளின் ஓசையை மூன்று ,நான்கு மாத்திரை அளவிற்கு நீட்டி ஒலிப்பது உண்டு .அதை அறிய எழுத்துகளை கூட்டி எழுத வேண்டும் என்று சொல்வார்கள் புலவர்கள் 

ஆ -இரண்டு மாத்திரை 
ஆஅ -மூன்று மாத்திரை 
ஓஒ -மூன்று மாத்திரை 

மாத்திரை என்பது 
 7.கண் இமை நொடி என அவ்வே மாத்திரை 
   நுண்ணிதின் உணர்தோர் கண்ட ஆறே
கண்ணை இமைக்கும் நேரமும் கையை சொடுக்கும் நேரமும் மாத்திரை என்று கூறுவர் ஒலியின் நுட்பத்தை அறிந்தோர் ,
இமை -கண்ணை இமைதல் ,நொடி-கையை சொடுக்குதல் 

உயிரெழுத்துகள் 
  8.ஔகார இறுவாய் 
     பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப 
'அ'முதல் 'ஔ' முதல் உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் என்று சொல்லுவர் ,
 அதாவது அ ,ஆ ,இ ,ஈ ,உ ,ஊ ,எ,ஏ ,ஐ,ஒ ,ஓ ,ஔ ஆகிய பன்னிரண்டு எழுத்து
 மெய் 
 9.னகர இறுவாய் 
  பதினெண் எழுத்தும் மெய்என மொழிப
'க்'முதல் 'ன்'முடிய பதினெட்டு எழுத்துகளும் மெய் என்று சொல்லுவர் புலவர் 
அதாவது க்,ங்,ச்,ஞ்,ட்,,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் மெய் ஆகும் 
10.மெய்யோடு இயையினும் உயிர் இயல் நிலையா

மெய்யோடு உயிரும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் ஒலிக்கும் போது உயிரெழுத்துக்களின் குறில் நெடில் என்ற தன்மை மாறது 
  

க் (மெய் )+அ(உயிர் குறில் )=க (குறில்) உயிரோடு மெய் சேர்ந்தாலும் உயிரோடு தன்மை மாறவில்லை 

11.மெய்யின் அளவே அரை என மொழிப 

பதினெட்டு மெய் எழுத்துகளும் அரை மாத்திரை அளவே ஒலிக்கும்

எ .கா ;க்,ங்,ச்...............
மெய் எழுத்துகளை உச்சரிக்கும் போதுஅரை வினாடி நேரத்தில் சொல்லி முடிக்க வேண்டும் .

12.அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே 

மெய் எழுத்துகள்  அரை மாத்திரை அளவு ஒலிப்பது போன்று  குற்றியலுகரம்,குற்றியலிகரம்.ஆய்தம் ஆகிய சார்பு எழுத்துகளும் அரை மாத்திரை அளவே ஒலிக்க வேண்டும் 

நண்டி யாது-குற்றியலிகரம்-அரை மாத்திரை 
படகு,காசு -குற்றியலுகரம்-அரை மாத்திரை 
அஃகு,எ ஃகு -ஆய்தம் 

மகர குறுக்கம் 
13.அரை அளவு குறுகல் மகரம் உடைத்தே 
      இசை இடன் அருகும் தெரியும் காலை 


மகரத்துடன் (ம்) வேறு ஒரு  எழுத்து சேரும் போது மகரம் தனது அரை மாத்திரை அளவில் இருந்து குறுகி கால் மாத்திரை அளவு ஒலிக்கும்.இப்படி பெரும்பாலும் செய்யுளில்  மட்டுமே நிகழும் .

எ.கா:போன்ம்,மருண்ம்

14.உட்பெறு புள்ளி உருஆ கும்மே

மகர வடிவமானது 'ப' வின் உட்பகுதியில்  ஒரு புள்ளி பெற்று வரும் 

குறிப்பு;முற்காலத்தில் பகரம் 'ப்' என்றும் மகரம் ப் என்ற மெய்யில் உள்ள புள்ளியானது 'ப'வின் உட்பகுதியில் இருந்தது .பின்பு அதை 'ம்'என்று மாற்றினர் 

15.மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்

 பதினெட்டு மெய்யும் புள்ளிகளை பெரும் 

16.எகர ஒகரத்து இயற்கையும் அற்றே 

     உயிர் எழுத்துகளுள் 'எ' என்ற எழுத்தும்'ஒ' என்ற எழுத்தும் புள்ளி பெரும் 

குறிப்பு ; தற்போது இப்படி எழுதுவது கிடையாது 

உயிர்மெய்களின் ஒலி,வரி வடிவம் 
 17.புள்ளி இல்லா எல்லா மெய்யும்
     உருஉரு ஆகி அகரமோடு உயிர்த்தலும் 
     ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் 
    ஆ ஈர் இயல உயிர்த்தல் ஆறே

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் பதினெட்டு மெய் எழுத்துகளோடும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளாக ஒலிக்கும் .மெய்யழுத்துகள் அகர உயிரோடு சேரும்போது ,அவை தனது புள்ளி நீங்கிய வடிவத்தை பெறும்.மற்றவை உருவம் திரிந்து வரும் 


க்+அ=க 
த்+அ=த ----அகர உயிரோடு சேரும்போது மெய் புள்ளி இல்லா வடிவம் பெறுதல் 

க்+ஆ=கா 
த்+ஈ =தீ 
ம்+எ =மெ-----மற்ற உயிரோடு சேரும் போது திரிந்த வடிவம் பெறுதல் 

18.மெய்யின் வழியது உயிர்த்தோன்றும் நிலையே 

உயிர் மெய் எழுத்தானது ஒலிக்கும் போது முதலில் மெய்யின் ஒலியையும்,பிறகு உயிரின் ஒலியை பெற்று ஒலிக்கும் 

கை=க்+ஐ ----சொல்லி பார்க்கவும் 

வல்லினம் 
19.வல்லெழுத்து என்ப கசட தபற

பதினெட்டு மெய் எழுத்துகளில் க் ,ச்,ட்,த்,ப்,ற், என்ற ஆறும் வல்லின எழுத்து எனப்படும் 

மெல்லினம் 
20.மெல்லெழுத்து என்ப ஙஞண நமன

பதினெட்டு மெய் எழுத்துகளில் ங்,ஞ்,ண்,ந்,ம் .ன் என்ற ஆறும் மெல்லின எழுத்து எனப்படும் 


இடையினம் 
21.இடை எழுத்து என்ப யரல வழள


பதினெட்டு மெய் எழுத்துகளில் ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,என்ற ஆறும் இடையின எழுத்து எனப்படும் 


மெய்மயக்கம் 
22.அம் மூவாறும் வழங்கு இயல் மருங்கின் 
     மெய் மயக்கு உடனிலை தெரியுங் காலை 

வல்லினம் மெல்லினம் இடையினம் என்று சொல்லப்பட்ட பதினெட்டு மெய் எழுத்துகளும்,ஒரு சொல்லில் அமையும் போது ,ஒரு மெய் எழுத்து தன்னோடு சேர்ந்தால் உடனிலை மெய்மயக்கம் எனவும் ,ஒரு மெய் எழுத்து மற்றொரு மெய் எழுத்தோடு சேர்ந்தால் அது வேற்று நிலை மெய்மயக்கம் என சொல்லப்படும் 

சுக்கு=சு+க்+கு=சு+க்+க்+உ ='க்' என்ற மெய் தன்னோடு தான் சேர்த்தல் -உடனிலை மெய்மயக்கம்  

பந்து=ப+ந்+து =ப+ந்+த்+உ =த் என்ற மெய் 'ந்' என்ற மெய்யோடு சேர்த்தல்-வேற்று நிலை மெய்மயக்கம் 
23.டறலள என்னும் புள்ளி முன்னர்க் 
     கசப என்னும் மூவெழுத்து உரிய.
     ட்,ற்,ல்,ள் என்னும் நான்கு  மெய்யழுத்துகளின் பக்கத்தில் க்,ச்,ப் என்ற மெய்யழுத்துகள் வரும் 


ட முன் கசப  


வெட்கம்,கட்சி,தட்பம் 
ற முன் கசப 
கற்க,முயற்சி,கற்ப
ல முன் கசப 
வெல்க,வல்சி,செல்ப
ள முன் கசப 
கொள்க,நீள்சினை,கொள்ப 


24.அவற்றுள்,
         லளஃகான் முன்னர் யவவும் தோன்றும் 
ல்,ள்,என்ற மெய்ய்ழுத்துகளின் பக்கத்தில் ய்,வ் என்ற எழுத்துகள் சேரும் 


ல் முன் ய,வ 
கொல்யானை,செல்வம்
ள் முன் ய,வ
வெள்யாறு,கள்வன்
25.ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்த்  
     தம் தம் மிசைகள் ஒத்த நிலையே 
     
      ங் ஞ் ண் ந் ம் ன் எனும் மெய்யழுத்துகள் ஆறினையும் அடுத்து அவற்றின் இணை எழுத்தாகிய க்ச்ட் த்ப்ற் என்னும் ஆறு வல்லெழுத்துகளும் பொருந்தும் 


எ.கா;தங்கம்,தஞ்சம்,கண்டன்,கந்தன்,கம்பு,மன்றம் 
26.அவற்றுள்,
         ணன ஃகான் முன்னர்க்
          கசஞ பயமவ அவ்வேழும் உரிய 


ண,ன என்ற இரண்டு மெய்யழுத்துகளை அடுத்து க ச ஞ ப ய ம வ எனும் ஆறு மெய் எழுத்துகளும் சேரும் 


எ.கா;எண்கு ,வெண்சாந்து ,வெண்ஞாண் ,வெண்புகை,வெண்மை,மண் யாறு ,எண்வட்டு


          புன்கு,புன்செய்,மென்ஞாண் ,அன்பு,வன்மை,இன் யாழ்,புன்வரகு,,

27.ஞ ந ம வ எனும் புள்ளி முன்னர் 
        ய ஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே      
    
     ஞ,ந,ம,வ என்னும் மெய்யழுத்தை அடுத்து யகரம் பொருந்தி நிற்கும் 


எ.கா;உரிஞ்யாது,பொருந்யாது,திரும்யாது,தெவ்யாது 
28.ம ஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும் 


    'ம்' என்ற மெய்யின் முன் 'வ்'என்ற மெய்யழுத்து சேரும்   
     
 வரும் வண்டி,வரும்வண்ணம் 
29.ய,ர,ழ என்னும் புள்ளி முன்னர் 
     முதலாகு எழுத்து ங கரமோடு தோன்றும் 


ய,ர,ழ,என்ற மெய்யழுத்துகளின் பக்கத்தில் மொழி முதலாகு எழுத்தும் (ச,த,ப,ஞ,ந,ம,ய,வக,),ங என்ற எழுத்தும் சேரும் 


ய முன் க,ச,த,ப,ஞ,ந,ம,ய,வ


செய்க,ஆய்வு, பாய்மரம்,பாய்தூக்கு
,
ர முன் க ச,த,ப,ஞ,ந,ம,ய,வ 
 வார்சிலை, ஆர்க,பார்வை,வேர்யாது,


ழ முன் க,ச,த,ப,ஞ,ந,ம,ய,வ
 வாழ்க,யாழ்தேவி,காழ்வை,தாழ்வு.வாழ்வு 


ய,ர,ழ,முன் ங
வேய்ங்கனம்,வேர்ங்கனம்,வீழ்ங்கனம் 
உடனிலை,வேற்றுநிலை மெய்மயக்கம் 
30.மெய்நிலை சுட்டின் எல்லா எழுத்தும் 
      தம்முன் தாம் வரும் ர,ழ அலங்கடையே
ர,ழ என்னும் என்ற இரண்டு மெய்யழுத்துகளை தவிர மற்ற எல்லா எழுத்துகளும் தம்மோடு தாம் சேர்ந்து வரும் 


எ.கா;காக்கை,எங்ஙனம்,பச்சை,மஞ்ஞை,பட்டை,கிண்ணம்,அத்தை,வெந்நீர்,அகப்பை,அம்மா,பெய்யும்,பல்லி,நவ்வி,பள்ளி,கற்றை,கன்னி
                    சுட்டெழுத்துகள்
31.அ இ உ அம்முன்றும் சுட்டு 
      உயிரெழுத்துகளுள் அ,இ ,உ என்னும் மூன்று எழுத்துகளும் சுட்டிக்காட்டும் சொற்களாக அமையும் 


எ.கா;அவன்,அவள்,அவர்,இவன்,இவர்,இவள்,உவன்,உவள்,அக்குதிரை,இம்மாடு 
உவன்,உவள் என்ற வழக்கு தமிழகத்தில் இப்பொழுது இல்லை.இலங்கையில் உள்ளது.அவனுக்கும் இவனுக்கும் உள்ள பொருளின் நடுவான தன்மையை உவன் குறிக்கும்.
32.ஆஏஓ அம் மூன்றும் வினா 


    ஆ,ஏ,ஓ, என்ற மூன்று எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும்பொழுது,அச்சொல் வினா எழுத்தாக அமையும்.


எ.கா;அவனா-ஆ,அவனே-ஏ,அவனோ-ஓ 


இவை முற்காலத்தில் வழங்கப்பட்ட வினா எழுத்தாகும்,நன்னூல் படி எ,யா,முதலும் ஆ,ஓ,இறுதியிலும் ஏ இருவழியும் வினாவாக அமையும் 


33.அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும் 
      உளஎன மொழிப இசையோடு சிவணிய 
      நரம்பின் மறைய என்மனார் புலவர் 


எ.கா; பிடிஊட்டி பின் உண்ண்ணும்  களிறு

உயிர் எழுத்துகள் நீண்டு ஒலித்தலும்,ஒற்றெழுத்துகளின் மாத்திரை அளவு நீண்டு ஒலித்தலும் இசையோடு புணர்ந்த நரம்பை மீட்டும் இயல்பை சொல்லும் செய்யுள் நூல்களில் உண்டு என்பர் புலவர்.இசை,விளி,பண்டமாற்று ஆகியவற்றின் போது எழுத்துகள் அளபிறந்து இசைக்கும் என்பார் நன்னூலார்
                      மொழிமரபு
34.குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும் 
      'யா'என் சினைமிசை உரைஅசைக் கிளவிக்கு
       ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே


ஒருவரை முன்னிலை படுத்தி அழைக்கும் சொல்லான 'கேண்மியா ''செண்மியா போன்ற சொற்களில் 'யா'என்ற எழுத்தின் முன்னே உள்ள மகரத்தில் ஏறி வரும் இகரம்  குற்றியலிகரம் ஆகும் 


எ.கா;கேள்+மியா=கேண்மியா
இதில் மி என்ற எழுத்தின் மாத்திரை அரை மாத்திரை ஆகும்.


35.புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே 
      உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்

இரண்டு சொற்கள் புணரும் போதும் குற்றியலிகரம் தோன்றும்.அவை குற்றியலிகர புணரியலில் சொல்லப்படும் .
சுக்கு+யாது=சுக்கியாது 


  குற்றியலுகரம் 


36.நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
      குற்றியல் உகரம் வல்ஆறு ஊர்ந்தே


நெட்டெழுத்தின் இறுதியிலும் ,பல எழுத்துகள் உள்ள தொடர் மொழியிலும் குற்றியலுகரம் வரும்.


பாகு,காசு,பாடு,காது,ஆறு,-நெட்டெழுத்தின் பின்னால் குற்றியலுகரம்
வரகு,பஞ்சு,தட்டு,பத்து,மார்பு,பற்று-தொடர்மொழியின் பின்னால் குற்றியலுகரம்


மேற்கண்ட சொற்களில் வரும் உகரமானது 1/2 மாத்திரை அளவு பெற்று ஒலிக்கும்.
37.இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே
      கடப்பாடு அறிந்த புணரியல் ஆன.


குற்றியலுகரம் எழுத்துகளின் இடையில் வருவதும் உண்டு.அவற்றின் விதிகளை குற்றியலுகர புணரியலில் காணலாம் 
.
    செக்கு+கணை=செக்குக்கணை-கால் மாத்திரை 
38.குறியதன் முன்னர் ஆயதப் புள்ளி 
     உயிரோடு புணர்ந்த வல்ஆறன் மிசைத்தே


குறில் எழுத்துகளை அடுத்தும் வல்லினமாகிய ஆறு குற்றெழுத்துகளை இறுதியிலும் கொண்டு ஆய்த எழுத்து இடையில் வரும் 


எ.கா;எஃகு,கஃசு,அஃது,இஃது,கஃடு.கஃறு 
கஃசு-கால் பலம் -நிறுத்தல் அளவை 
39.ஈறு இயல் மயங்கினும் இசைமை தோன்றும் 


    நிலை மொழி ஈற்றிலுள்ள ல்,ள் போன்றவை வருமொழியுடன் புணரும்போதும் ஆய்தம் தோன்றும் .அப்போதும் ஆய்தம் குறுகி அரை மாத்திரை ஒலிக்கும்.
முள்+தீது=முஃடீது
கல்+தீது =கஃறீது


40.உருவினும் இசையினும் அருகித் தோன்றும் 
     மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா 
       ஆய்தம் அஃகாக் காலை யான 


ஆய்த எழுத்து இசையிலும் வழக்கிலும் சிறுபான்மையாய்த் தோன்றும்.
எல்லா இடத்திலும் ஒற்றெழுத்துகள் போல அரை மாத்திரை பெரும்.ஆய்தம் மாத்திரை குறையாது ஒலிப்பதும் உண்டு.இது நிறம் ஓசை பற்றி வரும்


க ஃஃ றென்னும் கல்அதர் அத்தம் 
க ஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை 


அளபெடை 
41.குன்று இசை மொழிவயின்நின்று இசை நிறைக்கும்
    நெட்டழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே


மொழியின் ஓசை குறையும் இடத்து அவ்வோசையை நிறைக்க நெட்டழுத்தின் இனமான குற்றெழுத்து அதன் அருகில் சேர்த்து எழுதப்படும் 


   ஓஒதல் வேண்டும் 
    வாஅழ்க 
42.ஐ ஔ என்னும் ஆயிரு எழுத்திற்கு 
     இகர உகரம் இசைநிறைவு ஆகும் 


ஐ ஔ என்னும் இரண்டு எழுத்திற்கு ஒத்த குறில் எழுத்தாக அளபெடையில் "இ"கரமும் "உ"கரமும் முறையே ஒலி பெற்று வரும் 


தைஇ,உப்போஒ,ஔஉ


ஓரெழுத்து மொழிகள் 


43.நெட்டெழுத்து ஏழே ஓர்எ ழுத்து ஒரு மொழி 


   நெடில் எழுத்துகள் ஏழும் தனியே நின்று பொருளை தரும்.இவை ஓர் எழுத்து மொழிகள் எனப்படும் 


ஆ,ஈ,ஊ,ஏ,ஐ ,ஓ,ஔ


ஆ-பசு,தா-கொடு 
ஈ,வீ-மலர்
ஊ-ஊன்,பூ-மலர் 
ஏ-அம்பு,சே-ரிஷபம் 
ஐ-அழகு,தை-மாதம் 


ஓ-மதகு,கோ-மன்னன்
ஔ-பூமி 


44.குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே 


  குறில் எழுத்துகளாக வரும் அ,இ,உ,எ,ஒ ஆகியவை ஓரெழுத்து மொழியாக அமையாது

 45.ஓர்எழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி 
      இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
      மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே 


எழுத்துகள் அடிப்படையில் சொற்களை மூன்று வகைப்படுத்தலாம் .அவை  ஓர் எழுத்தால் ஆன மொழி,இரண்டு எழுத்தால் ஆன மொழி ,இரண்டிற்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆன தொடர்மொழி என்பன.


ஆ-ஓர் எழுத்தால் ஆன சொல் 
ஆண்-இரண்டு எழுத்தால் ஆன சொல் 
ஆகாயம்-நான்கு எழுத்தால் ஆன தொடர்மொழி 


46.மெய்யின்இயக்கம் அகரமோடு சிவணும்


   க்,ங்,ச்,ஞ் ........ மெய்யெழுத்துகள் அகரம் சேர்த்து க,ங,ச,ஞ என்று சொல்லப்படும்.


எ.கா;வல்லெழுத்து என்ப கசட தபற


மெய்மயக்கம்


47.தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
    மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை

உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துகளோடு சேர்ந்து மெய்யெழுத்துகளின்  தன்மையான வல்லினம்,மெல்லினம்,இடையினம் என்று மயங்கும் .அவ்வாறு மயங்குவது குற்றம் இல்லை.


'க' என்ற எழுத்தில் க் என்ற மெய்யும் அ உயிரும் உள்ளது.க எழுத்தை  வல்லினமாக சொல்லும்போது அதோடு சேர்ந்த அ வும் வல்லின தன்மையை அடைவது குற்றம் இல்லை.


48.யரழ என்னும் மூன்றும் முன்ஒற்ற
     கசதப ஙஞநம ஈர்ஒற்று ஆகும்.


யரழ என்னும் மூன்று மெய்யழுத்துகளை அடுத்து கசதபஙஞநம என்னும் எட்டு மெய்யெழுத்துகளும் இரட்டை எழுத்துகளாக வரும்.


ய முன் கசதப ஙஞநம
வேய்க்க,ஆய்ச்சி,வாய்த்து ,வாய்ப்பு ,காய்ங்கனி,சாய்ஞ்சாடு ,சாய்ந்து ,மெய்ம்முறை 
ர முன்  கசதப ஙஞநம
யார்க்கு ,நேர்ச்சி,வேர்த்து ,ஆர்ப்பு,ஆர்ங்கோடு,கூர்ஞ்சிறை ,நேர்ந்த,ஈர்ம்பனை 


ழ முன் கசதப ஙஞநம
வாழ்க்கை,தாழ்ச்சி,வாழ்த்து,காழ்ப்பு,பாழ்ங்கிணறு,பாழ்ஞ்சுனை,வாழ்ந்து பாழ்ம்பதி 


49.அவற்றுள்,
         ரகார ழகாரம் குற்று ஒற்று ஆகா

மேற்கூறிய நூற்பாவில் ர என்னும் மெய்யும் ழ என்னும் மெய்யும் குறில் எழுத்தை அடுத்து தனித்து வராது.
கார்,காழ்,பார்,பாழ் என்றே வரும்.கர்மம் ,புழ்பம் என்றோ வராது.
குறிப்பு;கர்மம்,புழ்பம் -வடமொழி சொற்கள் 


50.குறுமையும் நெடுமையும் அளவில் கோடலின் 
     தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல

குறில்,நெடில் என்ற வேறுபாடு மாத்திரையின் அளவால் சொல்லப்படுகிறது.எனவே,தொடர்மொழியில் தனி குறிலை அடுத்து ஒற்று வராது .ஆனால் அந்த தொடர் மொழியை நோக்கும் போது அம்மொழியின் மெய்யின் முன்னால் இரு குறில் இருக்கும்.எனவே,அதை நெடிலாக கொள்ள வேண்டும் 
எ.கா;புகர்,தகர்-இத்தொடர் மொழியில் தனி குறிலை அடுத்து ரகரம் வந்தது.ஆனால்,மெய்யின் முன்னால் உள்ள இரு குறிலை நெடிலாக கொள்க.
புலவர்-மூன்று குறில்கள் 
51.செய்யுளின் இறுதிப் போலி மொழிவயின்
      னகார மகாரம் ஈர்ஒற்று ஆகும் 


செய்யுளில் போலும்,மருளும் என்ற சொற்கள் வரும் போது, அச்சொற்கள் போன்ம்,மருண்ம் என்று ஈர்ஒற்று சொற்களாக வரும்.இது இறுதிப்போலி எனப்படும் 
போலும்-போன்ம்
மருளும்-மருண்ம்
மகர குறுக்கம் 
52.னகாரை முன்னர் மகாரம் குறுகும்.


   போன்ம் என்ற சொல்லில் உள்ள 'ம்' என்ற மெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.
எழுத்தானது சொற்களில் வரும்போதும் மாத்திரை அளவு மாறாது


53.மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்துவேறு இசைப்பினும் 
      எழுத்து இயல் திரியா என்மனார் புலவர் 


உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துக்கும் தனியே நின்ற போதும்,ஒரு சொல்லில் இடம்பெறும் போதும் தமது இயல்பில் மாறாது.
எ.கா;-ஒரு மாத்திரை 
             அன்பு -
-ஒரு மாத்திரை 
ன்-அரை மாத்திரை 
 பு-ஒரு மாத்திரை


  இலக்கண போலி 
54.அகர இகரம் ஐகாரம் ஆகும்.


ஐகாரதிற்குப் பதிலாக அகரமும்,இகரமும் சேர்ந்து வரும் .அப்படி எழுதுவதால் பொருள் மாறாது.


வைரம்-வயிரம்


55.அகரம் உகரம் ஔகாரம் ஆகும் .


அகரமும் உகரமும் சேர்ந்து ஔகாரதிற்கு பதிலாக வரும் 
ஔவை-அஉவ்வை
மௌவல்-மஉவ்வல் 
பௌத்தர்-பவுத்தர் 


56.அகரத்து இம்பர் யகரப்புள்ளியும்
     ஐஎன் நெடுஞ்சினை மெய்பெற தோன்றும்

 அகரத்தின் அருகே 'ய்' என்ற மெய்யழுத்தும் நின்று 'ஐ' என்ற எழுத்திற்க்கு பதிலாக வரும்
ஐவனம்-அய்வனம்,ஐயர்-அய்யர்,ஐயா-அய்யா 


ஐகாரகுறுக்கம்,ஔகாரகுறுக்கம் 
57.ஓரளபு ஆகும் இடனுமார் உண்டே 
      தேருங் காலை மொழி வயினான 
ஐகாரம் மொழியின் முதலிலும்,நடுவிலும்,கடைசியிலும் குறுகி ஒரு மாத்திரை அளவினதாக ஒலிக்கும்.ஔகாரம் மொழியின் முதலில் மட்டுமே வருதலால் மொழியின் முதலில் மட்டுமே குறுகும்.


ஐந்து-மொழியின் முதலில் ஐகாரம் அரை மாத்திரை அளவு ஒலிக்கும் 
இடையர்,பாவையர் ,மடையன்-மொழியின் இடையில் ஐகாரம் அரை மாத்திரை அளவு ஒலிக்கும் 
தலை,பார்வை,மாத்திரை-மொழியின் இறுதியில் ஐகாரம் வந்து அரை மாத்திரை அளவு ஒலிக்கும் 
ஔவையார்,மௌவல்,கௌதாரி-மொழியின் முதலில் மட்டுமே ஔகாரம்  குறுகி ஒலிக்கும்


58.இகர யகரம் இறுதி விரவும் 
    மொழியின் இறுதியில் இகரத்திற்க்கு பதிலாக யகரம் போலியாய் வரும்.
பாய்-பாயி
காய்-காயி

59.பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்.
      பன்னிரண்டு உயிர் எ ழுத்துகளும் தனித்து நின்று மொழி முதல் எழுத்துகளாக வரும்.
அவல்,ஆலமரம் ,இரவு,ஈகை,உலகம்,ஊர்,எறும்பு,ஏற்றம்,ஐம்பது,ஒருவன்,ஓசை,ஔவை


60.உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா


  தனித்த மெய் எழுத்துகள் மொழி முதல் எழுத்துகளாக வராது.உயிரோடு சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளாகவே வரும்.
மொழிமுதல் எழுத்துகள் 
61.கதந பம எனும் ஆஐந்து எழுத்தும் 
     எல்லா உயிரோடும் செல்லுமார் முதலே 


க்,த்,ந்,ப்,ம் எனும் ஐந்து மெய் எழுத்துகளும் பன்னிரண்டு உயிர் எழுத்து களோடும் சேர்ந்து மொழி முதலெழுத்துகளாக வரும்.
க் என்னும் மெய் 
கடல்.காதல்,கிளி,கீரை,குரங்கு,கூடை,கெண்டை,கேணி,கை,கொண்டை, கோவில்,கௌதாரி 
த் என்னும் மெய் 
தமிழ்,தாழை,திருவை,தீ,துண்டு,தூது,தென்னை,தேங்காய்,தை,தொன்னை,தோணி ,தௌவை -தமக்கை 
ந் என்னும் மெய் 
நட்பு,நாள்,நிலவு,நீர்,நுங்கு,நூல்,நெய்தல்,நேரம்,நை-தேய்,நொய்யல்,நோய்,நௌவி-மான் 
ப் என்னும் மெய் 
பழம்,பாவை,பிறை,பீர்க்கம்,புலால்,பூ,பெண்,பேதை,பை,பொற்றை,போகம்,பௌவம் 
ம என்னும்  மெய்
மண்,மாலை,மின்னல்,மீன்,முதலை,மூங்கில்,மெய்,மேகம்,மை,மொந்தை,மோகம்,மௌவ்வல்


அ,ஐ,ஔ தவிர மற்ற மெய்களுடன் 'ச'கரம் மொழிமுதல் ஆதல்


62.சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே 
     அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே


ச் என்ற மெய்யானது அ ஐ ஔ என்ற மூன்று உயிர் எழுத்துகளை தவிர மற்ற உயிர் எழுத்துகளோடு சேர்ந்து உயிர் மெய்யாக வரும்.


எ.கா;சாவி,சிலை,சீற்றம்,சுண்ணாம்பு,சூழ்ச்சி,செக்கு,சேவல்,சொல்,சோறு


குறிப்பு;சங்கம்,சங்கு,சட்டி போன்ற வார்த்தைகள் பிற்கால வழக்கு என்கிறார்,நச்சினார்கிக்னியார்.தேவநேயப்பாவாணர் இந்த நூற்பா"அவை  ஔ என்னும் ஒன்று அலங்கடையே "என்று இருக்க வேண்டும் என்கிறார் 


63.உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் 
     வ என் எழுத்தோடு வருதல் இல்லை

வகர மெய்யானது உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் எழுத்துகளை தவிர மற்ற உயிர் எழுத்துகளோடு சேர்ந்து மொழிமுதல் எழுத்தாக வரும். 
வனம்,வானம்,விறகு,வீணை,வெற்றி,வேல்,வௌவால்
64.ஆ எ ஒ 
      என்னும் மூவுயிர் ஞகாரத்து உரிய 


ஞகாரம் ஆ,எ,ஒ என்னும் மூன்று உயிர் எழுத்துகள் மட்டுமே சேர்ந்து மொழி முதலாக வரும்.


ஞாயிறு,ஞெகிழி,ஞொள்கல்-இளைத்தல் 


குறிப்பு;இதன் வழி நூலான நன்னூலில் ஞ வும் மொழி முதலாக வரும் என உள்ளது ஞமலி-நாய் 
65.ஆ வோடு அல்லது யகரம் முதலாது.


    யகர மெய் ஆ என்னும் உயிரெழுத்து மட்டுமே சேர்ந்து மொழி முதலாக வரும்.
யானை,யாறு(யவனர்,யூகம் என்பது வடமொழி சொற்கள்)


66.முதலா ஏன தம்பெயர் முதலும்.


மொழிக்கு முதலில் வராது என்று சொல்லிய எழுத்துகள் ,அந்த எழுத்துகளை பற்றி சொல்லும் போது மொழியின் முதலில் வரும்.
எ.கா;'ட' என்ற எழுத்தானது ..........-இத்தொடரில் முதலில் வந்தது.


மொழி முதல் குற்றியலுகரம்
67. குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் 
       ஒற்றிய நகரமிசை நகரமோடு முதலும் 


'நுந்தை' என்னும் உறவுமுறை சொல்லில் 'நு' ஆனது தன் ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் .இது மொழி முதல் குற்றியலுகரம் ஆகும்.குற்றியலுகரம் பொதுவாக மொழியின் இறுதில்தான் வரும்.


68.முற்றிய லுகரமோடு பொருள்வேறு படா அது 
      அப்பெயர் மருங்கின் நிலையி லான


பொதுவாக ஒரு குற்றியலுகர சொல்லானது குற்றியலுகரமாக ஒலிக்கும் போது ஒரு பொருளும் முற்றிய லுகரமாக ஒலிக்கும் போது ஒரு பொருளுமாக ஒலிக்கும்.ஆனால் நுந்தை என்ற சொல் அவ்வாறு வேறுபடுவதில்லை .
எ.கா;கட்டு-குற்றியலுகரம்-ஓலைக் கட்டு,சீட்டுக்கட்டு 
             கட்டு-முற்றியலுகரம்(முன்னிலை ஏவல்)-சீக்கிரம் புல்லை கட்டாக கட்டு
மொழி இறுதி எழுத்துக்கள்
69.உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும்.


   உயிர் எழுத்துகளில் ஔகாரம் நீங்கலாக ஏனையவை மொழியின் இறுதியில் வரும் .
 நெட்டெழுத்து ஏழும் ஓரெழுத்து மொழியாக தாமே மொழி முதலாகவும் மொழி இறுதியாகவும் வரும்.ஏனையவை அளபெடையில் மொழி இறுதியாக வரும்.
எ.கா;ஆ-பசு,ஈ,ஊ-ஊன்,ஏ-அம்பு,ஐ-அழகு,ஓ-மதகு,-இவை மொழி முதலாகவும் மொழி இறுதியாகவும் வந்தது.
  ஆஅ,ஈஇ ,ஊஉ,ஏஎ,ஓஒ-அளபெடையில் இறுதியாக வந்தது