கிளவியாக்கம்
திணை
484. உயர்திணை என்மனார் மக்கட் கட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே
ஆஇரு திணையும் இசைக்கும் மன சொல்லே
மக்களை உயர்திணை என்று சொல்வார்கள் ஆசிரியர்கள் .அவர்கள் அல்லாத பிற அஃறிணை என்பர் .இந்த இரு திணைகளின் அடிப்படையில் சொற்கள் சொல்லப்படும்
எடுத்துக்காட்டு ; மன்னன்,கண்ணன்,பொன்னி ,செல்வி -உயர்திணை
மரம்,மலை,ஆடு -அஃறிணை
485.ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
பல்லோர் அறியும் சொல்லே சிவணி
அம்முப் பாற்சொல் உயர்திணை அவ்வே
ஆணை அறியும் சொல் பெண்ணை அறியும் சொல் ,பலரையும் அறியும் சொல் மூன்றும் உயர்திணையை குறிக்கும் சொல்லாகும்
எடுத்துகாட்டு;அரசன் -ஆண்பால்
அரசி-பெண்பால்
மக்கள்-பலர்பால்
486.ஒன்றறி சொல்லே பலர் அறி சொல்லே என்று
ஆ இரு பாற்சொல்லே அஃறிணை அவ்வே
ஒன்றினை அறியும் சொல்(ஒன்றன்பால் )பலவற்றினை அறியும் (பலவின் பால் )சொல் என்ற இரண்டும் அஃறிணை எனப்படும்
எடுத்துகாட்டு ;காளை-ஒன்றன்பால்
காளைகள் -பலவின்பால்
487.பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலை கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலை கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே
உயர்திணை மருங்கில் பால் பிரிந்து இசைக்கும்
உயர்திணையில் பெண் தன்மையை குறிக்கும் ஆண் தன்மை திரிந்த பெயர் சொல்லும் ,தெய்வம் குறித்த பெயர் சொல்லும் தம் பாலை உணர்த்தும் ஈற்று எழுத்துகளை உடையது அல்ல ,அவை தனக்கு பொருத்தமான வினை ஈறுகளை கொண்டு முடியும் .
எ.கா ;பேடி வந்தாள்,பேடர் வந்தார் -ஆண் பால்,பெண் பால் என்பது நிகழும் இடத்தை பொருத்துஅமையும்
தேவன் வந்தான்,தேவி வந்தாள்
ஆண் பால் ஈறு
488.னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்
னகார ஈற்று சொற்கள் ஆண் பாலை உணர்த்தும்
எ.கா;அவன் ,கண்ணன் ,பொன்னன்
பெண்பால் ஈறு
489.ளஃகான் ஒற்றே மகடூஉஅறிசொல்
ளகரத்தை இறுதியாக உடைய சொற்கள் பெண்பாலை உணர்த்தும்
எ.கா;அவள்,செய்தாள்,
பலர்பால் ஈறு
490.ரஃகான் ஒற்றும பகர இறுதியும்
மாரை கிளவி உளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே
ரகர ஈற்று சொற்களும் ,பகர ஈற்று சொற்களும் ,'மார்' என முடியும் சொற்களும் பலர் பாலை உணர்த்தும்
அவர் வந்தார்-ரகர ஈற்று
கொள்ப,செல்ப-பகர ஈற்று
கொண்மார்- மார் ஈற்று -'மார்' கிளவி இக்காலத்தில் வழக்கத்தில் இல்லை
ஒன்றன் பால் ஈறு
491.ஒன்றறி கிளவி தடற ஊர்ந்த
குன்றிய லுகரத்து இறுதியாகும்
து,டு,று போன்ற ஈறுகளை உடைய சொற்கள் ஒன்றன் பாலை குறிக்கும் சொற்களாகும்
எ.கா;மாடு வந்தது ,நாய் குரைத்தது
குயில் கூவிற்று
முயல் குருந்தாட்டு
குருந்தாட்டு =குறுகிய அடியை உடையது
பலவின் பால் ஈறு
492.அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே பலவறிசொல்
அ,ஆ,வ இந்த மூன்று எழுத்துகளை இறுதியாக உடைய சொற்கள் பலவின்பாலை குறிக்கும்
எ.கா;உண்டன ,உண்ணா,உண்குவ
493.இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய
ஈற்றில் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
தோற்றம் தாமே வினையோடு வருமே
மேற்சொன்ன பதினோரு ஈறுகளும் இருதிணையிலும் ஆண்பால்,பெண் பால்,ஒன்றன் பால்.பலவின்பால்,பலர் பால் ஆகிய ஐந்து பால்களிலும் வரும்.இவை பெயரோடு சேர்ந்து வருவது குறைவே.வினைசொற் களோடு அதிகம் சேர்ந்து வரும்.
ன்,ள்.ர்,ப,மார்-உயர்திணையில் வரும் பால்களை காட்டும்
து,று,டு,அ,ஆ,வ-அ ஃ றிணையில் வரும் பால்களை காட்டும்
494.வினையில் தோன்றும் பால்அறி கிளவியும்
பெயரில் தோன்றும் பால்அறி கிளவியும்
மயங்கல் கூடா தம் மரபினவே
ஒரு தொடரில் பெயரும் வினை சொற்களும் வரும்போது பெயரில் உள்ள பாலும் வினைசொல்லில் உள்ள பாலும் ஒன்றாக இருக்க வேண்டும்.
எ.கா;அவர் வந்தார் என்று வர வேண்டும் அல்லாமல் அவர் வந்தாள் என்றோ அவன் வந்தார் என்றோ வரக்கூடாது
495.ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே
ஆண்உருவத்துடன் இருந்து பெண் தன்மையை உடைய பேடிஆண் பாலக ஏற்க்கபடமாட்டாது.பெண்ணாக கொள்ளப்படும்
பேடி வந்தாள் என்று கூறவேண்டும்,
496.செப்பும் வினாவும் வழா அல் ஓம்பல்
பொதுவாக நாம் பேசும் சொற்கள் அனைத்தும் வினா விடையாக அமைவதால் வினாவும் விடையும் குற்றமற்று அமைக்க வேண்டும்
கேட்கும் வினாவிற்கு நேரடியாக பதில் சொல்வது "நேர்விடை "அல்லது செவ்வனிறைஎன்றும் மறைமுகமாக பதில் சொல்வது இறைபயப்பது எனப்படும்.
கந்தா,உண்டாயா? என்ற வினாவுக்கு "உண்டேன்"என்பது செவ்வனிறை "வயிறு வலிக்கிறது"என்பது இறைபயப்பது ஆகும் .
செப்பு=விடை
496.வினாவும் செப்பே வினா எதிர் வரினே
ஒரு வினாவே விடையாக மற்றொரு வினாவிற்கு அமையும்
" தம்பி கடைக்கு செல்கிறாயா?"என்ற கேள்விக்கு "செல்ல மாட்டேனா? "என்பது விடையாக அமைந்தது
.
497.செப்பே வழயீஇயினும் வரைநிலை இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவியான
ஒருவர் கேட்ட வினாவிற்கு விடையானது மரபிலிருந்து வழுவி வந்தாலும் ஏறக்குறைய ஒத்துவந்தால் அதை விடையாக ஏற்கலாம்
கண்ணா உண்டாயா?என்ற கேள்விக்கு "நீயே உண்""வயிறு வலிக்கும்""உண்டேன் ""நேரம் ஆகிவிட்டது" என்பவற்றையும் விடையாக கொள்ளலாம்
499.செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு
அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே
வினாவிலும் விடையிலும் ஒப்பிட்டு உவமை சொல்வதுண்டு.அப்போது முதல் பொருளை முதல் பொருளோடும் சினை பொருளை சினை பொருளோடும் சேர்த்து சொல்லவேண்டும்
.
தூணை போன்ற கால்கள் -சினையோடு சினை
உங்கள் தலைவர் எங்கள் தலைவரை போன்றவர் -முதல் பொருள்-ஒப்பு உங்கள் மன்னரை விட எங்கள்மன்னர் சிறந்தவர் -உறழ்ச்சி
500.தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதி கிளவி வரைநிலை இலவே
தகுதி சொற்களும் வழக்கு சொற்களும் எப்பொழுதும் போலவே சொல்லப்படும்.அவற்றிற்கு இலக்கணம் வரைநிலை இல்லை .
'தகுதி சொல்' என்பது ஒரு சொல்லை அதே பொருளில் சொல்லும் போது கொச்சையாக தோன்றலாம் .எனவே அச்சொல்லை மறைமுகமாக சொல்கிறோம்.தற்காலத்தில் அத்தகைய சொற்களை ஆங்கில மொழியில் சொல்கிறோம்
இறந்தார்=இறைவனடி சேர்ந்தார்
குழந்தை மலம் கழித்து விட்டது=குழந்தை டாய்லெட் போயிட்டு-தற்காலம்
'வழக்கு சொல்' என்பது தொன்று தொட்டு ஒரு சொல்லை வேறு சொல்லால் சொல்வது .
மங்கள வழக்கு-விளக்கை வளரவிடு -உண்மையான பொருள்-விளக்கை அணை
இடக்கர் அடக்கல்-கால் கழுவி வந்தான்-உண்மை பொருள்-மலம் கழுவி வந்தான்
501.இனசுட்டு இல்லா பண்பு கொள் பெயர்க்கொடை
வழக்காறு அல்ல செய்யுள் ஆறே
இன சுட்டுபெயர் இல்லாத பண்பு பெயர்கள் சொல் வழக்கில் வராது.செய்யுளில் மட்டுமே வரும் .
எடுதுக்காட்டாக வெண்ணிலவு என்பது நிலவை மட்டுமே குறிக்கும்.அதற்க்கு மாற்றாக கரும்நிலவோ.செந்நிலவோ என்பது கிடையாது .இருப்பினும் நிலவின் பெருமையை கூற வெண்ணிலவு என்று சொல்லப்பட்டது.இப்படி சொல்வது செய்யுளில் கூறப்படும்.
502.இயற்கைப் பொருளை இற்று என கிளத்தல்
தன்னுடைய இயல்பில் மாறாமல் நிற்கும் நிலம்.நீர்,காற்று,நெருப்பு போன்றவற்றை இத்தகைய தன்மையுடையது என்று கூற வேண்டும்
.
எ.கா;நிலம் வலிது,நீர் தண்ணியது,தீ வெம்மையது,காற்று அசைவது
503.செயற்கை பொருளை ஆக்கமோடு கூறல்
செயற்கை பொருளின் தன்மை மாறி இருக்கும் போது அதன் தன்மையை கூறி பொருளை கூற வேண்டும்.
எ.கா;பால் கசந்தது.
பால் என்றாலே இனிமையானது.அதன் தன்மை மாறியதால் கசந்தது என்று சொல்ல வேண்டும்.
504.ஆக்கம் தானே காரணம் முதற்றே
இயற்கை பொருளை ஆக்கம் கொண்டு பேசும்போதும் எழுதும் போதும் ஆக்கத்திற்கான காரணத்தை கூறி ,பிறகு ஆக்கச் சொல்லை சொல்ல வேண்டும்.
எ.கா;உரல் குத்தல் அரிசியால் சமைத்தால் உணவு நன்றாக இருந்தது.
எரு இட்டு ,நீர் பாய்ச்சியதால் பயிர் நன்றாக வளர்ந்தது
505.ஆக்கக்கிளவி காரணம் இன்றியும்
போக்கின்று என்ப வழக்கின் உள்ளே
ஆக்கக்கிளவியை காரணம் இல்லாமலும் சொல்லலாம்
எ.கா;பயிர் நன்றாக வளர்ந்தது
506.பால் மயக்குற்ற ஐயக்கிளவி
தான் அறி பொருள்வயின் பன்மை கூறல்
இன்ன திணை என்று தெரிந்து பால் என்ன என்று தெரியாத போது அச்சொல்லை பன்மையாக சொல்ல வேண்டும்.
எ.கா;அங்கே தொலைவில் வருபவர் ஆணோ ?பெண்ணோ ?
வருபவர்-பன்மை
அங்கே மேய்ந்துகொண்டிருப்பவை பசுவோ?காளையோ?
மேய்ந்துகொண்டிருப்பவை என்ற பன்மை இங்கு வழு அமைதியாக ஏற்று கொள்ளப்படும்
507.உருபுஎன மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இரு ஈற்றும் உரித்தே சுட்டும் காலை
உருபு என சொல்லும் இடத்திலும் ,அஃறிணை பொது சொல்லின் கண்ணும் ஐயம் ஏற்படும் பொது அந்த இரண்டு உருபுமோ அல்லது அஃறிணை பொது சொல்லாகவோ அமைய வேண்டும்
எ.கா;ஆணோ?பெண்ணோ?அங்கே வருவது?-உருபு
ஒன்றோ?பலவோ?வயலில் புகுந்த மாடுகள்?
508.தன்மை சுட்டலும்உரித்துஎன மொழிப
அண்மை கிளவி வேறு இடத்தான
திணையும்,பாலும் உறுதியாக தெரியும் பொழுது 'இது இல்லை"என்ற அண்மை சொல்லானது அந்த இல்லாத சொல்லின் மீது ஏற்றி சொல்லப்படும்.
எ.கா;அங்கே நிற்பது ஆண்தான் பெண் இல்லை
அங்கே ஓடுவது மாடுதான் மனிதன் இல்லை
இங்கு இல்லை என்ற சொல்லானது இல்லாத பொருள் மீது ஏற்றி சொல்லப்பட்டது
.
509.ஆடை,சினை,முதல் என முறை மூன்றும் மயங்காமை
நடை பெற்று இயலும் வண்ணச் சினைச் சொல்
வண்ண சினைச்சொல்லானது (செங்கால் நாரை,பசுந்தாள் பாவை,கரும்கண்செல்வி)முதலில் வண்ணம்,உறுப்பு,முதற்பொருள் என்ற அமைப்பில் மாறாமல் வழக்கப்படும்
செங்கால் நாரை
செம்மை-சிவப்பு நிறம் ,கால்-உறுப்பு,நாரை-முதல் பொருள்
பால் வழுமைதி
510.ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்ற்னைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லாறு அல்ல
ஒருவனையோ ,ஒருவளையோ மரியாதை நிமித்தமாக அவர் என்று உயர்த்தி சொல்வது இலக்கணத்திற்கு உட்பட்டவை அல்ல.இருந்தாலும் உலக வழக்கில் மரபு வழுமைதியாக ஏற்றுக்கொள்ளப்படும் .அதே போல் அஃறிணையை சொல்லும் போதும் ஏற்றுக்கொள்ளப்படும்
கண்ணன் வந்தார்(வழுமைதி)-கண்ணன் வந்தான் (இலக்கணப்படி)
நரியார் வந்தார் (வழுமைதி)-நரி வந்தது(இலக்கணப்படி)